search
top

விடியலை நோக்கி

அழகான வீட்டின் முன்னாடி இருக்கும் சிறிய தோட்டத்தில் இருந்து பூக்களின் மணம் கலந்த சுகமான காற்று வேதாவின் நாசியைத் தீண்டியது. காலை பரப்பரப்பு ஓய்ந்த இந்த அமைதி, பழக்கம் என்றாலும், இன்று வேதா மனதில் ஒரு சலிப்பும் வெறுமையும் சூழ்ந்தது. வேதாவின் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் இது நியாயம் என்று தான் தோன்றும்.

வேதா பயந்த சுபாவம் உள்ளப் பெண். பிறந்த வீட்டில் சுதந்திரம் இல்லாமல், ரொம்பக் கண்டிப்புடன் வளர்ந்தவள். டிகிரி முடிக்கும் முன்பே 19வயதிலையே அரவிந்த் உடன் திருமணம். திருமணத்திற்குப் பிறகாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைத்ததில் விழுந்தது மண். அரவிந்த் பார்க்க நன்றாக இருப்பான் பெரியப் படிப்பு, நல்ல வேலையும் கூட. ஆனால் ரொம்ப முன்கோபம், அகம்பாவம், ஆண் என்ற மமதை இதெல்லாம் எப்போதும் அவனுடன் இருப்பவை.

திருமணம் ஆன நாளிலிருந்து இதோ இன்று வரை, 30வருடமாக வேதாவின் பொழுது 4மணிக்கே ஆரம்பித்துவிடும். அரவிந்துக்கு கடவுள் பக்தி, பூசை இதில் எல்லாம் விருப்பமும், நம்பிக்கையும் அதிகம். விடிகாலை எழுந்து, ஆபீஸ் போகும் முன்பு 2மணி நேரம் கடவுளிடம் உரையாடி விட்டுத்தான், செல்வான். வேதாவும் பிடிக்கிறதோ இல்லையோ கூடவே எழுந்து எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டும். கூடவே தேவையான சிற்றுண்டியும் தயார் செய்வாள். ஆனால், அரவிந்தோ, தன்னை நம்பி வந்த மனைவி இடம் குறைந்தபட்ச அன்பையோ மதிப்பையோ காட்டத்தெரியாதவன். இவனுக்கு பூசை சாமி எல்லாம் எதற்கு என்று தோன்றுகிறது.

மனைவி என்பவள் தன் ஆளுமையில்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் வர்க்கத்தில் அரவிந்தனும் ஒருவன். வேதாவிற்கு என்று ஒரு விருப்பு, வெறுப்போ, பேச்சு சுதந்திரமோ கிடையாது. வேதாவிற்கு பாட்டில் மிகவும் ஈடுபாடு, நன்றாக பாடவும் செய்வாள். கச்சேரி போகும், கேட்கும் பழக்கமுள்ள அரவிந்த் இதுவரை அவளைப் பாடச் சொல்லிக் கேட்டதில்லை. “நீ பாடினால் கதவிடுக்கில் மாட்டிய எலி போல் இருக்கு, தயவு செய்து என் முன்னால் பாடதே”, என்பான். ஆபீஸ், மற்றும் friends இவர்களிடம் எல்லாம் கலகல என்று பழகுபவன் மனைவியை மட்டும் ஒரு அடிமை போல்தான் நடத்துவான். வேதாவிற்கு கைவேலை painting எல்லாம் ரொம்ப நன்றகத் தெரியும். ஆனால், “நீ என்ன கண்காட்சியா வைக்கப் போகிறாய்?” என்பான்.

ஒருவரின் எந்த சொல்லோ, செயலோ, நமக்கு வருத்தமும், கஷ்டமும் தருகிறதோ, அதையே நாம் மற்றவர்களுக்கு செய்யக் கூடாது என்ற எண்ணம் கொண்டவள் வேதா. எல்லோரிடமும் ரொம்பவும் நட்புடன் அன்புடனும் பழகுபவள். உறவினற்கோ, நண்பர்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ உதவி செய்வதிலும், உடல் நிலை சரி இல்லை என்று தெரிந்தால் அவர்களுக்கும் செவிலியரைப் போல் துணையாக இருப்பதிலும் முதல் ஆளாக இருப்பாள்.
ஆனால் கணவருடன் இதுவரை ஒரு ஆபீஸ் பார்ட்டியோ, நண்பர்கள் வீடோ போனதில்லை. இப்படி இருந்தும் வேதாவுக்கு கணவனிடத்தில் அன்பு இருக்க தான் செய்தது. இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உண்டு. மற்றவர்கள் அவரைக் குறை சொல்லக் கூடாது என்பதற்காகவே, தனக்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தாரோ என்று வேதா நினைப்பதுண்டு. இன்று அவன் திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக இருக்கான். அப்பப்போ போனில் பேசுவதோடு சரி. அவனாவது மனைவியை நல்லபடியாக வைத்திருக்கானே என்று தோணும். வேதாவும் அவர்களை தொந்தரவு செய்யமாட்டாள்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இவளுக்கென பொறுப்பெல்லாம் முடிந்து, கவலை இல்லாத வாழ்க்கை என்றுதான் தோன்றும். ஆனால் வேதாவிற்கு தான் தெரியும், ஒரு நாள்கூட தான், தனக்காக வாழ்வில்லை என்று. சாப்பாடு விஷயத்தில்கூட கணவனது விருப்பம்தான். சரி, வீட்டில்தான் இப்படி என்றால், என்றேனும் அத்திப் பூத்தாற்போல் ஹோட்டல் சென்றால் அங்கும், அவளுக்கும் சேர்த்து அவனே ஆர்டர் செய்து விடுவான். இன்னும் சொல்ல வேண்டுமானால், பெண்களுக்கு உள்ள மெனோபாஸ் கஷ்டத்திலும், அவனது தேவையையோ சௌகரியத்தையோ குறைத்துக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில்கூட கணவனின் அன்பும், அனுசரணையும் அவளுக்கு கிடைக்கவில்லை.

கூடப் பிறந்தவர்களும், பெற்றோரும் அரவிந்த் குணம் தெரிந்து கொஞ்சம் ஒதுங்கியேதான் இருப்பார்கள். வேதாவிற்கு தன் கணவன் எப்படி இருந்தாலும், அனுசரித்து போவதுதான் நல்லது என்று எண்ணுபவள். இருந்தும், மற்ற கணவன், மனைவியைப் பார்க்கும் போது ஒரு ஏக்கம் வரத்தான் செய்யும். மனதில் உள்ளதை எல்லாம் ஆதங்கத்துடன் தன் பள்ளித் தோழி தயாவுடன்தான் பகிர்ந்துக் கொள்வாள். அவளுடன் எப்போ பேசினாலும் கணவனிடம் தைரியமாக பேசச் சொல்வதுடன், மனதளவில் வேதாவிற்கு அதற்கு உண்டான பக்குவமும், தைரியமும் வரும்படியான முயற்ச்சியை செய்யத் தவறமாட்டாள். தயாவிடம் பேசும் போது வரும் தைரியம், கணவனைக் காணும் போது, விளக்கைப் போட்டால் ஓடி மறையும் இருளைப் போல் வேதாவின் தைரியமும் ஓடி மறைந்து விடும்.

இன்று என்னவோ மனம் ரொம்ப சலிப்படைந்து விட்டதுப் போல் தோன்றியது. இன்னும் கொஞ்ச நாளில் அரவிந்த் ஓய்வு பெற்று விடுவார். அப்பவும் இதே நிலை தொடர்ந்தால் தன் மன அழுத்தமே நோயில் தள்ளி விடுமோ என்று அஞ்சினாள். முன்பு மன பலம் இருந்ததோ, இல்லையோ உடல் பலம் இருந்ததால் எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்தது. இப்போ மன, உடல் பலம் இரண்டுமே சோர்ந்து விட்டது. அன்புக்கும் அனுசரணைக்கும் ஏங்கியது, இதைக் கணவனும் உணர வேண்டும் என்று விரும்பினாள். வேதா இனியும் தாமதிக்காமல் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று உணர்ந்தாள்.

தன் உயிர்த் தோழி தயாவிடம் பலவிதமாக கலந்து ஆலோசித்து, என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்தாள். இப்போது மனம் ஒரு ஜான்சி ராணியாக உருவெடுக்கத் தொடங்கியது. இத்தனை வருட மண வாழ்க்கையில் அரவிந்திற்கு தன் மேல் ஒரு துளி அன்பேனும் இருக்கும் என்று நம்பி இந்த முடிவை எடுத்தாள். நிதானமாக அரவிந்திற்கு, மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி ஒரு நீண்ட கடிதம் எழுதினாள். அதோடு அவனை விட்டு தான் தற்காலிகமாக பிரிந்து இருக்க விரும்புவதையும் தெரியப்படுத்தினாள். இந்தப் பிரிவு அவனுக்குப் பலதையும் புரிய வைக்கும் என்று நம்பினாள். தான் இல்லாத போது தன் அன்பையும், அன்யோன்னியத்தையும் கணவன் உணர வேண்டும், என்று விரும்பினாள். நம்பிக்கைதான் வாழ்க்கை; அரவிந்த் தன்னை தேடி வரும் நாள் வெகு தூரம் இல்லை; மீண்டும் ஒரு புது வாழ்க்கையை அரவிந்துடன் தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

banner ad

Comments are closed.

top